Sunday, May 10, 2015

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகும். இலக்கியத்தை நேசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு சமுதாயத்தின் சுவடுகளை நமக்குள் பதித்துவிடுகின்றார்கள். பல்வேறு இலக்கிய வடிவங்களும் அகவயம் அல்லது புறவயம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்த முனைகின்றபோது அது எமது சிந்தனைகளில் தாக்கம் செலுத்துகின்றது.

இன்று இலக்கிய வடிவங்கள் பல்வேறு வகையிலும் பலராலும் உள்வாங்கப்பட்டுள்ளது. கவிதைகள், சிறுகதைகள் போன்றன மனதில் உள்ள விடயங்களை அல்லது சமுதாயத்தில் புரையோடிப்போன விடயங்களைச் சொல்ல விளைகின்றன.

இந்த வகையில் இளம் எழுத்தாளர் ஹனீபா சஹீலாவும் நம்முன்னே கதாசிரியராக உருவெடுத்திருக்கின்றார். பாடசாலை ஆசிரியராக கடமையாற்றும் இவர், தான் எழுதிய பத்து சிறுகதைகளை ஒன்றிணைத்து விதி வரைந்த பாதையி

லே என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கின்றார்.

விதி வரைந்த பாதை என்ற என்ற முதல் கதையானது காதலின் வலிகளை வார்த்தை வழியே சொல்லியிருக்கின்றது. இன்றைய காலத்தில் அந்த உணர்வுகள் பலராலும் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது. புனிதமான விடயங்கள் இன்று வெறும் பித்தலாட்டங்களாக இருக்கின்றன. சுமையா என்ற கதாபாத்திரத்தை வைத்து பின்னப்பட்ட சிறுகதையும் அத்தகையதொரு காதலைத்தான் நமக்குச் சொல்கின்றது. கைவிட்டுப்போன காதலை நண்பர்கள் மூலமாக தேடும் சுமையா இறுதியில் ஒரு வைத்தியருக்கு சந்தர்ப்பவசத்தால் மனைவியாகிவிடுகின்றாள். தன்னைக் காதலித்து ஏமாற்றிய நிசார் என்பவனின் நினைவுகளை அவள் அழித்தொழித்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்தாள். அக்காலத்தில் அவன் தான் செய்த திருட்டுக் குற்றத்தால் கைதாகி, பின்னர் சிறையிலிருந்து விடுதலைப் பெற்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகின்றான். விதி வரைந்த பாதையில் பயணித்த அவன் சுமையாவின் கணவரிடமே சிகிச்சைக்கு வருகின்றான். அங்கே சுமையாவைக் கண்ட அவன் தனது தவறுகளை உணர்ந்து, யாரிடமும் சொல்லாமலேயே அங்கிருந்து சென்றுவிடுகின்றான். எனவே அவனது பாதை இனி விதி வரைந்த படியே இருக்கும் என்பதை இந்தக் கதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

பாவம் இந்தப் பாவை என்ற என்ற கதை ஹஸ்னாவின் சோகங்களை சொல்லில் வடித்திருக்கின்றது. தனது வறுமை நிலமை காரணமாக வெளிநாட்டுக்குப் பயணமாகும் கதைக் கருவை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. பெண்களும் வெளிநாட்டுப் பயணமும் என்ற தொனிப்பொருளில் பல கருத்துக்களை முன்வைக்க முடியும் என்ற போதிலும், பொதுவாக எல்லோரது அபிப்பிராயமும் வெளிநாட்டுப் பயணம் பெண்களை சீரழிக்கும் என்பதாகும். பெண்களை மாத்திரமின்றி குடும்பத்தை, கணவனை, பிள்ளைகளை என எல்லாவற்றையுமே சர்வ நாசமாக்கிவிடும். அண்மையில் சவூதியில் மரண தண்டனை பெற்ற ரிஸானா நபீக் என்ற பெண்ணை இவ்வுலகம் எளிதில் மறந்துவிடாது. வாதப் பிரதிவாதங்கள் பலதாக இருந்தபோதிலும் அடிப்படை அவள் வெளிநாட்டுக்கு சென்றமைதான். குடிசை வீட்டை, மாடி வீடு ஆக்குவதற்காக தனது தலையை அடகு வைத்த அந்த கொடூர சம்பவம் நம் இதயத்தில் எல்லாம் இரத்தக் கண்ணீர் பாய்ச்ச வைத்தது. கதாசிரியர் ஹனீபா சஹீலா எழுதியிருக்கும் ஹஸ்னாவின் கதையில், அவள் தன் கனவுகளை சுமந்து வெளிநாடு சென்று உழைத்து வருகையில், தன் குடும்பமே சுனாமிக்கு இரையாகிவிட்டதை அறிந்து கதறுகிறாள். கண்ணீர் வடிக்கிறாள். இறுதியில்... தனது குடும்பம் தன்னுடன் இருப்பதான ஒரு கற்பனையில் பைத்தியமாகி விடுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கீழுள்ள வரிகள் எத்தனை உருக்கமானது என்பதை பாருங்கள்.

`ஆத்மா அடங்கிவிட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஹஸ்னா தனது தங்கை ஹனீனாவுக்காக கொண்டு வந்த அந்த பொம்மையை அணைத்து முத்தமிட்டாள். நாட்கள் நகர்கையில் அந்த பொம்மை, தங்கை ஹனீனாவாக மாறியது. தனிமையில் இருந்துகொண்டு அதை முத்தமிடுவதும் உரையாடி விளையாடுவதும் வழக்கமாகியது.'

கறுப்பு ஜூன் என்ற கதை ஒரு உண்மைக் காதலை காட்சிப்படுத்தியிருக்கின்றது. கௌதம் என்பவன் தனது காதல் பற்றி சிந்து என்ற பெண்ணிடம் சொல்வதாக கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. காதலித்தபோது தாம் எப்படி உண்மையாக இருந்தோம் என்பதை அவன் சொல்கையில் இன்றைய காலத்திலும் இவ்வாறு காதல்கள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகின்றது.

மனதைத் திறந்த மடல் என்ற கதை, சமூகத்தின் இருப்பு நிலையை எடுத்து விளக்குகின்றது. மணமுடிக்கும் பெண், சீதனம் என்ற பெயரில் எவ்வளவு மனத் தாக்கங்களுக்கு ஆளாகின்றாள் என்பதையோ, மனதால் இணைந்த இருவரைக்கூட சீதனம் என்ற பெயரால் பிரிப்பது தவறு என்பதையோ பலர் புரிந்துகொள்வதில்லை. இக்கதையில் வரும் சாஹிர் தன் குடும்ப நிலை அறிந்து வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்கின்றான். விடுமுறையில் வந்திருக்கும்போது தனது மைத்துனியான ரிபாவைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளும் சம்மதிக்கிறாள். தங்கைகள் மூவரின் திருமணத்தை நடத்திவிட்டுத்தான் ரிபாவை மணமுடிப்பதாக தாயாரிடம் தெரிவிக்கையிலேயே பூகம்பம் வெடிக்கின்றது.

ஷஅவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த வீட்ல போய் நீயும் கஷ்டப்படுவ. உனக்கு பெரிய இடமா நான் பார்க்கிறேன். இந்தக் கதய இத்தோடு மறந்திடு. என்ன மீறி அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ட மௌத்துக்கும் என் முகத்துல முழிக்காத| என்று தாயார் கூறுகிறார். தாயின் வார்த்தையை மீறவும் முடியாமல், காதலை மறக்கவும் முடியாமல் இறுதியில் நிரந்தரமாகவே வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறான் சாஹிர்.
எத்தனையோ ஆண்கள் இன்று இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றார்கள். மாமி மருமகள் சண்டைகளின்போது இருதலைக்கொள்ளி எறும்புகளாக இருக்கின்றார்கள். பெற்று வளர்த்த தாயா? நம்பி வந்த மனைவியா? என்கிறபோது யார் பக்கம் தவறிருந்தாலும் சமாதானமாக்க ஆண் படும்பாடு சொல்லிமாளாது. மகன் மாறிவிட்டான் என்று தாய் பதறுவாள். கணவன் சரியில்லை என்று மனைவி கதறுவாள். இறுதியில் வாழ்க்கையே சிதறும் அவனுக்கு. இவ்வாறான இக்கட்டுகள் நேர்கையில் ஆண்கள் எடுக்கும் முடிவு யாரும் வேண்டாம் என்றுவிட்டு எங்காவது சென்றுவிடுவதுதான் என்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது.

கதாசிரியர் ஹனீபா சஹீலாவுக்கு கதையை லாவகமாக நகர்த்திச் செல்லும் திறன் நிறையவே இருக்கின்றது. தான் பார்த்த அல்லது கேட்ட விடயத்தை கதையாக்கிவிடும் நுணுக்கம் தெரிந்திருக்கின்றது. ஆழ்ந்த வாசிப்பின் மூலம் அவர் இன்னமும் தன் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். இலக்கிய ரசிகர்கள் இந்தத் தொகுதியை வாங்கி வாசிக்க வேண்டும். அவரது முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டும். கதாசிரியர் ஹனீபா சஹீலா, நிறைய சமூக அவலங்களை சிறுகதையாக வெளிக்கொணர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200 ரூபாய்