Wednesday, June 20, 2012

பூஞ்சிறகுகள் - சிறுவர் பாடல்

பூஞ்சிறகுகள் சிறுவர் பாடல் மீதான இரசனைக் குறிப்பு

புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடாக மேக வாழ்வு எனும் கவிதைத் தொகுதியையும், நோன்பு என்ற பெயரில் சிறுவர் கதை நூலொன்றையும் தந்த வெளிமடை ரபீக் அவர்கள் தனது அடுத்த தொகுதியை சிறுவர் பாடல்களாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். 22 பக்கங்களை உள்ளடக்கிய பூஞ்சிறுகுகள் என்ற இந்த நூல் வர்ணப் படங்களையும் ஏந்தி அழகாக காட்சியளிக்கின்றது. சிறுவர்களின் மனதைக் கவரும்படியான அழகிய பாடல்களும், படங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.

வெள்ளாப்பு வெளியின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்நூல் பற்றி குழந்தைகள் போலவே குழந்தை இலக்கிய வடிவங்களும் வடிவழகு மிளிர்பவை. எளிமையும், எழிலும் பூப்பவை. குழைவு மொழியாய் குதூகலிப்பவை. தேனோசையில் சுரந்து வழிபவை. பூஞ்சிறகுகளாய் புளகாங்கிப்பவை என்கிறது வெள்ளாப்பு வெளி வெளியீட்டகம்.


ஈழக்கவி நவாஸ் ஏ. ஹமீட் அவர்கள் நூலின் சிறப்பம்சம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியங்களைப் படைப்போர் குழந்தைக்கல்வி, குழந்தை உளவியல், குழந்தைகளுக்குரிய கற்பித்தலியல், சிறுவர் அழகியல், சிறுர்களுக்கான மொழி, ஓசை, பாடுபொருள் முதலிய பல்வேறு துறைகளிலும் அறிவு மிக்கவர்களாயிருத்தல் இத்தகைய உயிர் துடிப்புமிக்க பாடல்களை எழுதியிருக்கிறார்.

திரு. ரபீக் அவர்கள் ஆரம்பப் பிரவுக்கான ஆசிரியப் பயிற்சியையும் பட்டப்பின் படிப்பின் மூலமாக உளவியலையும் அறியப் பெறறிருப்பவர் ஆரம்ப, உயர்தர வகுப்புக்களுக்கு கற்பித்த ஆசிரியர் ரபீக் அவர்கள் தற்போது வெளிமடை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுகிறார்,

அம்மா என்ற முதல் பாடலானது அகர வரிசைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. தாயினதும், இரண்டு பிள்ளைகளினதும் வர்ணப்படமும் இக்கவிதைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன் சில வரிகள் இதோ..

அம்மா எங்கள் அம்மா
ஆசையான அம்மா
இனிமையான அம்மா
ஈகை வழங்கும் அம்மா

உணவு சமைக்கும் அம்மா
ஊஞ்சல் ஆட்டும் அம்மா
எனக்கு விருப்பம் அம்மா
ஏற்றம் காட்டும் அம்மா...

தங்கை என்ற பாடல் இனிமையாகவும், ஓசை நயம் மிக்கதாகவும் காணப்படுகின்றது. நிலவைப் பற்றியும் பாடலினூடாக கூறும் கவிஞர் சிறுவர்கள் விரும்பும் பாடலாக இதை புனைந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

தங்க நிலவு வானிலே
தவழும் அழகைக் காணவே
தங்கை வந்து நிற்கிறாள் - கையைத்
தட்டித் தட்டிச் சிரிக்கிறாள்!

அங்கும் இங்கும் பார்க்கிறாள் - அந்த
அழகிய நிலவைக் கேட்கிறாள்
மங்கல் வானைப் பார்க்கிறாள் - நிலவு
மறைவதெப்படி? கேட்கிறாள்..

துயில் கொண்டிருக்கும் தன் குட்டித் தம்பியை ஒரு சிறுமி பள்ளிக்கூடம் போவதற்காக எழுப்புகிறாள். அந்த விடயத்தை பாடல் மூலம் தந்திருக்கிறார் கவிஞர். சிறுவன் கட்டிலில் தூங்குவது போன்றும், அவனருகே ஒரு சிறுமியும், கடிகாரமும் சித்திரத்தில் காணப்படுகின்றன. தம்பியை எழுப்பும் அந்தக் காட்சி சித்திரமாக்கப்பட்டிருக்கின்றமை சிறுவர்களை கவர்ந்துகொள்ளும்.

சோம்பல் நீயும் கொள்ளாதே
சோர்ந்து நீயும் தூங்காதே
வீம்பு நீயும் கொள்ளாதே
விரைவாய் தம்பி எழுந்திடுவாய்

பள்ளி செல்ல வேண்டுமே
பாடம் படிக்க வேண்டுமே
துள்ளி நீயும் எழுந்திடுவாய்
தூக்கம் வேண்டாம் எழுந்திடுவாய்!

முத்துப் பற்கள் என்ற தலைப்பில் சிறிய பாடல் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. எட்டு வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் பற்களை பாதுக்காக்க வேண்டும் என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது.

கண்ட கண்ட பொருளை பல்லால்
கடிக்கும் பழக்கம் தவிர்திடுவோம்
உண்ட பின்னே உறங்கும் முன்னே
ஒழுங்காய் பல்லைத் துலக்கிடுவோம்

வெட்டும் பற்கள் வேட்டைப் பற்கள்
வேண்டும் நமக்கு நாளுமே
முத்துப் பற்கள் நன்றாய் காத்து
மகிழ்ச்சி காண்போம் வாழ்விலே!

மாலைக்காட்சி, அணில் குஞ்சு, மரம் நடுவோம், பச்சைக்கிளி என்ற தலைப்புக்களிலும் அழகிய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவ்வாறான பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வெளிமடை ரபீக் அவர்களின் பூஞ்சிறகுகுள் என்ற நூலும் தனக்கான தனியிடத்தைப் பெற்று நிற்கின்றது.

குழந்தைகளுக்கு எது நல்லது என்பதை பெற்றோரும், வளர்ந்தவர்களும் நன்கறிவார்கள். இன்றைய இளஞ் சமூகம தனது ஓய்வு நேரங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக் கருவிகளுடன் கழிக்கின்றது. ஆனால் அதன் பாரதூரங்களை அவர்கள் அறியமாட்டார்கள். நாம்தான் சிறுவர்களுக்கு உகந்தவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் நூல்கள் அறிவுக்குத் தீனியாகவும், நல்ல விடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் திகழ்கின்றன. எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மிளிர வேண்டுமானால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கற்றக்கொடுங்கள். நூலாசரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!

நூலின் பெயர் - பூஞ்சிறகுகள் (சிறுவர் பாடல்)
நூலாசிரியர் - வெளிமடை ரபீக்
தொலைபேசி - 077 9790053
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 150 ரூபாய்

No comments:

Post a Comment