Thursday, June 30, 2011

ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள்

ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை

சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.

இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்துகின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.

தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.

தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும், ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.

முதல் சம்பவமான அவன் ஒரு நட்சத்திரம் என்ற கதையில் முஹம்மத் என்ற பலஸ்தீனச் சிறுவனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறுவதையே தன் இலட்சியமாகக் கொண்டிக்கும் அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதுதான் ஆகிறது. தனது தந்தையுடன் கடைவீதிக்குச் செல்லும் முஹம்மதையும், முஹம்மதின் தந்தையையும் இஸ்ரேலிய இராணுவத்தினன் ஒருவன் தனது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றான். ஆக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது எப்படிப் போனாலும் தனது ஆரம்பப் பாடசாலை அணியில் கூட விளையாடும் அதிர்ஷ்டம் இன்றி இறந்து போகிறான் சிறுவன் முஹம்மத். மற்ற பிள்ளைகளுக்காக வாழும் முஹம்மதின் தாய் அவர்களிடம் இப்படிச் சொல்கிறாள். 'முஹம்மத் இப்போது சுவர்க்கத்தில் இருக்கிறான். ஒரு நட்சத்திரமாக' இதயத்தை கசக்கிப்பிழியும் சம்பவம் இது. ஒரு அப்பாவிச் சிறுவனின் ஆசை இங்கே நிராசையாகிப்போகிறது.

பிஞ்சுகளும் பிசாசுகளும் என்ற கதையில் 1988 இல் பிறந்த ரீட்டா, ருத் என்ற இரு யுவதிகளின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. டுட்சி இனத்தவரான இவர்கள் மீது ஹூட்டு இனத்தவர்கள் தாக்குதல்களை மேற் கொள்கின்றார்கள். தமது உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பா, அம்மா, பதினொறு வயதான மாமி கேத்தி எல்லோரும் காடுகளுக்கூடாவும், மலைகளுக்கூடாவும் எந்தவித வரைபடங்களோ, இலக்குகளோ இன்றி செல்கின்றார்கள். டுட்சி இனத்தவர்களை வலை விரித்துத்தேடும் ஹூட்டு இனத்தவர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க பெரும்பாடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் தாயும் தந்தையும் இறந்துவிட மாமியான கேத்தியுடன் வேறிடம் தேடி செல்கையில் ஜேன் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. எனினும் அதுவும் தமக்கு உகந்த இடமல்ல என்பதுபோல அவர்களைத் தேடி ஹூட்டு இனத்தவர்கள் ஜேனின் வீட்டுக்கு வருகின்றார்கள். அதனால் தம்மால் ஜேன் என்ற பெண்ணுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக மீண்டும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இந்தக் கதையினிடையே சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை வாசிக்குமிடத்து இவ்வாறான பயங்கரங்கள் நிகழுமா என்ற அச்சம் தோன்றுகிறது. காட்டுப் பாதையை ஊடுறுவி அவர்கள் வரும்போது காணாமல் போயிருந்த தந்தையின் சடலத்தைக் காண்கின்றனர். அஞ்சலி செலுத்தவோ, கதறியழவோ வழிகளின்றி அவரது பிணத்தை அநாதரவாக விட்டுச்செல்லும் அந்த நிலைமை அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஒரு மணிப்புறாவின் மரணம் என்ற கதையில் வல்லுறவுக்கு உட்பட்டு அநியாயமாக இறந்துபோன இளம் நங்கையின் சோகத்தை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். அதாவது பெயரில் மாத்திரம் பசுமையாக (கிறீன்) வாழுகிறான் ஒரு அமெரிக்க இராணுவ வீரன். ஜோர்ஜ் புஷ்ஷின் ஊர்க்காரன் என்பதால் அவனுக்கு இராணுவத்தில் இடம் கிடைத்ததா அல்லது குற்றம் புரிவதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டானா என்ற கேள்வி சாட்டையடியாக இருக்கின்றது. அபீர் ஹம்சா என்ற பதினான்கு வயது இளம்பெண் மீது குறியாக இருக்கும் கிறீன் அவளை துவம்சிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். திட்டத்தை அமுல்படுத்தும் நாளன்று தனது சகாக்களுடன் செல்லும் கிறீன், அபீர் ஹம்சாவின் பெற்றோரையும், ஐந்து வயதேயான அவளது சகோதரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு தனது நண்பர்களுடன் இணைந்து அவளை மானபங்கப்படுத்துகின்றான். காரியம் முடிந்த பின் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தின் மீது தலையணையை வைத்து ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகின்றான்.

சராசரி மனிதர்களுக்கு நேரும் இக்கொடுமைகளுக்கும் அப்பால் ஒரு பிக்குவுக்கு நேர்ந்த துன்பகரமான விடயங்களை தப்பிப் பிழைத்த பிக்கு என்ற கதையில் அறியக் கிடைக்கிறது. பிக்குவின் கரங்கள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் அவரது நெஞ்சிலும் முகத்திலும் இராணுவத்தினர் ஓங்கி உதைககின்றனர். மூர்க்கத்தனமாக அறைந்து காதுகளில் ஏறி மிதிக்கின்றனர். அகில பர்மா துறவிகள் அமைப்பின் தலைவர் யார், நீ அதில் அங்கத்துவம் வகிக்கின்றாயா போன்ற கேள்விகளைக் கேட்டு அந்த பிக்குவை படுத்தும்பாடு மிகவும் வேதனைக்குரியது. அதிஷ்டவசமாக அந்த சிறையிலிருந்து தப்பி விடுகின்றார் பிக்கு. எனினும் அதிகார வர்க்கதினருக்கு அந்த பிக்கு சொல்லும் போதனை இதுதான். அதாவது 'அராஜகங்களைக் கைவிடுங்கள். இல்லையேல் நீங்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவீர்கள்' என்பதுதான்.

உபகாரம் என்ற சம்பவம் லூசியா என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஷெல்களும், துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துவிட்டால் லூசியாவின் குடும்பத்தினர் பைபிளோடு சங்கமமாகிவிடுவார்கள். சேர்ச்சுக்குப் போகும் ஒருநாளில் குண்டுச் சத்தம் காதைப் பிளக்க தனது குழந்தைகளுக்கு ஒன்றும் நிகழக்கூடாது என்று எண்ணியவாறு கிட்டத்தட்ட மூர்ச்சையான நிலையை எய்துகிறாள் லூசியா. புனித பூமி மன்றம் என்ற அமைப்பினால் லூசியாவைப் போன்ற பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உதவியும் இல்லாமல் போகிறது. ஆம். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் புனித பூமி மன்றம் மூடப்படுகிறது. மன்றத்தின் பணம் ரமழான் மாதம் முழுவதற்கும் முடக்கப்படுகின்றது. தனது வாழ்வையும், சுவாசத்தையும், நம்பிக்கையையும் யாரோ தூர எடுத்துச் சென்றுவிட்டதாக லூசியா உணர்கின்றாள். நீண்ட நேரத்துக்குப் பின் அவளது மகனான ஜோனை தேடுகிறாள் லூசியா. தூரத்தில் குண்டுச்சத்தம் கேட்கிறது. அவளால் எதையும் அனுமானிக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமாக இருக்கின்றாள். எனினும் போதகர் அவளை நோக்கி ஓடி வருவதாக காண்கிறாள். ஜோன் இறந்து விட்டானா? என்ற அச்சத்தை வாசகர்களின் மனதுக்குத் தந்து விடுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள்.

இவ்வாறான பல நிகழ்வுகளை உள்ளம் உருகும் விதத்தில் தந்திருக்கும் நூலாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது எழுத்துப் பணி மென்மேலும் சிறந்து விளங்கவும், இன்னும் பல படைப்புக்களைத் தர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - ஒரு குடம் கண்ணீர் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
தொலைபேசி - 0777 303818
வெளியீடு - யாத்ரா
விலை - 300 ரூபாய்

Thursday, June 23, 2011

விடியலின் விழுதுகள் - சிறுகதை

விடியலின் விழுதுகள் சிறுகதை  தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை எழுதுதல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுகதைகளை எழுதும் வீதம் சமீக காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருமதி. ஸக்கியா ஸத்தீக் பரீத் அவர்களும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கின்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதி உட்பட முதிசம், இதயத்தின் ஓசைகள் என்ற நூல்களையும் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் திருப்பம், மங்கா வடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறை தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார், மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் 122 பக்கங்களில் அமைந்திருக்கின்றது.



திருப்பம் என்ற முதல் கதை அப்பாவிப் பெண்ணான மஸ்னாவைப் பற்றி பேசுகிறது. பிறக்கும்போதே தாயை இழந்த அவள் உம்மும்மாவின் தயவிலேயே வாழ்கின்றாள். காலங்கள் நகர்ந்து செல்ல உம்மும்மா மௌத்தாகின்றார். அதன் பின் மஸ்னாவுக்கு வாழ்க்கையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கின்றது. தான் தனித்த விடப்பட்டதாக எண்ணி கவலைக்கொண்டிருக்கும் சமயத்தின் பக்கத்து வீட்டு மைமூன் நோனா மஸ்னாவைத் தேடி வருகின்றார். மஸ்னாவின் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தனது வீட்டு வேலைக்காரியாக்குவதே மைமூன் நோனாவின் உள்நோக்கமாக இருந்தது. உம்மும்மாவின் சகோதரரான குஞ்சு மாமா மஸ்னாவை அவர்கள் நன்றாக பார்த்தக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளை அனுப்பி வைக்கிறார்.

அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயங்கர கட்டம் இங்குதான் நிகழ்கின்றது. அதாவது மைமூன் நோனாவின் மகன் பியாஸ், மஸ்னாவின் பேரழகில் மயங்கி அவளை வேட்டையாடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி அறுபது வயதாகியும் ஆசை நரைக்காத மைமூனின் கணவனும் மஸ்னாவில் குறிவைத்திருக்கிறார்.

எதேச்சையாக ஒருநாள் மைமூனின் கணவர் மஸ்தானிடம் அகப்பட்டுக்கொள்ளுவதிலிருந்து மயரிழையில் தப்பும் மஸ்னா, வீட்டைவிட்டு ஓடிவந்து தாஹிர் ஹாஜியாரின் வீட்டில் நுழைகிறாள். தங்க மனம் படைத்த அவரும் அவரது மனைவியும் மஸ்னாவை தம் பிள்ளைபோல ஆதரித்து அவளுக்கு வீடும் கட்டிக்கொடுத்து திருமணம் முடித்து வைப்பதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சமூகத்தில் நடமாடும் சில வேங்கைகள் பார்ப்பதற்குத்தான் பசுக்களாகத் தெரிகின்றனர். ஒரு அப்பாவி மாட்டி விட்டால் அவளை எப்படி கூறுபோட்டு எப்படி விற்றுவிடலாம் என்ற கேவலமான புத்திகொண்டவர்கள் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களிடமிருந்து தப்புதல் பெருங்கஷ்டம். எனினும் மஸ்னாவின் இறைபக்தியும், துணிச்சலும் அவனைக் காப்பாற்றி விட்டது.

சிறுமிகளை வேலைக்குச் சேர்க்கும் இன்னொரு கதையாக மங்கா வடு அமைந்திருக்கின்றது. ரிஸ்மினா என்ற பெண் வேலைக்கார சிறுமிக்கு செய்கின்ற கொடுமைகள் இக்கதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. எந்த வேலையென்றாலும் இந்தச் சிறுமியை ஏவுவது, அடிப்பது, சூடு வைப்பது முதலிய கொடுமைகள் நிகழ்கின்றன். இவ்வளவுககும் ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளாவின் வயதையொத்த சிறுமிதான் இந்த வேலைக்காரச் சிறுமி.

இவ்வாறு நடந்துகொள்வது பொலீஸீக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் வேலைக்கார சிறுமி மீது பரிவும் காட்டிக்கொண்டிருக்கின்றார் எதிர்வீட்டு ஆரிபா தாத்தா. தீடீரென கோலிங்பெல் அடிக்கிறது. பொலீஸார்தானோ என்று பயப்படும் ரிஸ்மினா பதட்டததோடு நிற்க, வந்தவர்கள் சொல்லும் விடயம் ரிஸ்மினாவை அதிர்ச்சியடைய வைக்க இருவரும் வைத்தியசாலையை அடைகின்றனர். அங்கே... ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளா இறந்து கிடக்கின்றாள்.

ரிஸ்மினாவை விட வேலைக்கார சிறுமிக்குத்தான் வேதனை அதிகமாக இருக்கின்றது. அது கீழுள்ள வரிகளில் அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

`நோனா அடிக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிய உத்தமி ஷர்மிளா, உம்மாவுக்குக் களவாக எல்லாத் தீன்பண்டங்களையும் தரும் என் அன்புத்தங்கை ஷர்மிளா, ஷர்மிளா தான் இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல்...'

இறுதியில் ரிஸ்மினாவின் இதயம் துடிக்கின்றது. தன் மகளாக வேலைக்காரச் சிறுமியை வளர்க்கப்போவதாக அவள் கூறுகையில் அந்தச்சிறுமி அதை மறுத்து, ஷர்மிளா இல்லாத வீட்டில் தான் இருக்கப் பேவதில்லை என்று கூறி தனது வீட்டுக்கு சென்று விடுகின்றாள்.

மனிதர்கள் போடும் திட்டங்கள் முற்று முழுதாக சரியாக இருக்காது. அல்லாஹ்வின் திட்டங்கள்தான் சரியாக இருககும் என்பதை இறைத்தீர்ப்பு என்ற கதை விளக்கி நிற்கிறது. வசதிவாய்ப்புகளோடு வாழும் ரிஸானாவுக்கு முப்பது வயதில் முர்ஷித் என்ற மகன். அவனுடைய திருமணத்தை தடைசெய்த படியே இருக்கும் ரிஸானாவின் நண்பியான சப்ரியத் ஆண்டி. உம்மாவும் சப்ரியத் ஆண்டியும் பார்ககும் பெண்களையெல்லாம் குறை கூறிக்கொண்டிருப்பது பிடிக்காமல் நல்மனம் படைத்த முர்ஷித் வெளிநாடு சென்று விடுகிறான். கதையின் இறுதி முடிவு மிகவும் சந்தோஷமாக அமைந்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே முர்ஷித் பெண்பார்க்கச்செல்லும் தாஹிரா என்ற பெண்னை உம்மா வேண்டாம் என்கிறாள். அல்லாஹ்வின் நாட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த அதே அழகில் தனது மழலைகளுடன் கணவரை இழந்து விதவையாக இருக்கிறாள் அந்தப்பெண் தாஹிரா. அவளை முர்ஷித் திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்து முதலில் ரிஸானா துடிக்க, சப்ரியத்துக்கு விட்மின் டொனிக் குடித்த பரவசம் ஏற்படுகிறது.

அடுத்தவரின் துக்கத்தில் சந்தோஷம் காணும் சப்ரியத்தின் திருவிளையாடல்களை புரிந்துகொண்டு, தனது நண்பியால் தனது மகனின் வாழ்வு இத்தனைக் காலங்களாக பாழ்ப்பட்டிருப்பதை இறுதியாக உணர்ந்து கொள்ளும் ரிஸானா, சப்ரியத்தைக் கூப்பிடாமல் தனது உறவினர்களுடன் தாஹிராவின் வீட்டுக்குச் சென்று திருமணம் பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. சப்ரியத் போன்றவர்கள் கதைகளில் மாத்திரம் உலாவும் பாத்திரங்களல்ல. நிஜத்திலும் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களை அறிந்து விலக வேண்டியது எங்கள் திறமையில் தங்கியிருக்கிறது.

இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் பகிடிவதை நடைபெறுகிறது. சிலர் அதைத் தாங்கிக் கொள்கிறார்கள். வேறுசிலர் படிப்புக்கே கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுகின்றார்கள். சமூக மயமாக்கல் என்ற பெயரில் நிகழும் இந்த கலாச்சாரம் வெறும் அநாச்சாரம் என்று இன்னும் மாணவ சமூகம் புரிந்துகொள்ளவில்லை. திசைமாறிய பறவை என்ற கதையில் வரும் அஸ்மா டாக்டர் ஆகும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அங்கு குழுமியிருந்த மாணவர் கூட்டம் அவளது ஹிஜாபை கழற்றி வீசச்சொல்கிறது. செருப்பை தலையில் வைத்து நடக்கச்சொல்கிறது. இறுதியில் புளித்த பாலில் மிளகாய்த் தூள் தூவி அதை அருந்த வைக்கிறார்கள். இந்த சம்பவம் அஸ்மாவை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இரைப்பையில் அலர்ஜி ஏற்படுவது மாத்திரமன்றி அவள் மனநோயாளியாகவும் மாறி விடுகின்றாள். காலம் கழிய பகிடிவதையில் நாயகனாக செயற்பட்ட முனாஸ் என்ற மாணவன் டாக்டராகி அஸ்மாவை இந்தக்கோலத்தில் சந்திக்கிறான். அவளது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவன் செய்த காரியத்தால் மனநோயாளியாகியிருக்கும் அஸ்மாவை இறுதியில் தன் மனைவியாக்கி அவளுக்கு வாழ்வு கொடுக்கின்றான். டாக்டராக வரமுடியாமல் போன அஸ்மா, டாக்டரின் மனைவியாகி நிற்பதைக் கண்டு ஊரே ஆனந்தப்படுவதாக கதை முடிந்திருக்கின்றது.

கோக்கி யார் என்ற கதை உள்ளத்தை உருக்கும் சம்பவமாக இருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் இரவுபகலாக நெருப்பில் வெந்து தனது மகனின் படிப்பு செலவுகளை மேற்கொள்ளும் காஸிம் காக்கா நம்பிக்கையான மனிதர். அவர் கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும்போது அவர் கொண்டுபோகும் நெய்பூந்தியை வாங்கவென்றே சிறுபிள்ளைகள் அவரது வருகைக்காய் காத்திருப்பார்கள். தந்தை படும் கஷ்டங்கள் தெரியாமல் வளரும் மகன் தப்ரிஸ் வீடுமுறைகளில் கொழும்புக்கு வந்து ஓரிரு நாட்கள் வாப்பா காஸிமுடன் தங்கிவிட்டுச் செல்வான். அவன் சாதாரணதர பரீட்சையில் நல்ல முறையில் சித்தியடைந்தாலும் அவனது ஒழுக்கத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் மனமுடைந்து இருதய நோயாளியாகிறார் காஸிம். தப்ரிஸ் உயர்தரம் கற்பதற்காக வேண்டி விண்ணப்பங்களுக்கு ஒப்பம் பெற காஸிமைத்தேடி வருகிறான். ஹோட்டலில் அவர் இல்லை. அவரது அறையிலும் இல்லை.

முதலாளியிடம் வந்து வாப்பா எங்கே என்று கேட்காமல் மரியதையின்றி கோக்கியார் எங்கே என்று கேட்க, முதலாளிக்கு கோபம் உச்சத்தை அடைகிறது. தறுதலையாக இருக்கிறானே என்று திட்டியவர் வைத்தியசாலைக்கு அழைத்துப்போகின்றார். போகும் வழியில் காஸிம் அடுப்படியில் வெந்து பட்ட கஷ்டங்களைச் சொல்ல தப்ரிஸூக்கு அடிமனதில் ஏதோ நெருடுகிறது. வைத்தியசாலையில் வைத்து காஸிம் காக்காவின் தலையை முதலாளி ஆறுதலாக தடவி விடும்போதே கண்மூடி காஸிம் இறந்து போகின்றார். தவறை உணர்ந்த தப்ரிஸ், முதலாளியின் உதவியுடன் வாப்பாவின் ஆத்ம சாந்திக்காக மீண்டும் பழைய தப்ரிஸாக மாறி படிக்கின்றான்.

இங்கே நான் கூறியவற்றிற்கும் அப்பால் இன்னும் பல நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. திறமையாகவும், வித்தியாசமான கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மனதை ஈர்க்கின்றன. அனைவரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 175/=