Thursday, March 3, 2011

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட்டிருப்பவன் தான் இலக்கியவாதி. அவ்வகையான நற்குணங்களும், சமுதாய நோக்கும் உடைய, இன்று ஷெல்லிதாசன் என்று பரவலாக அறியப்பட்ட மாபெரும் கவிஞரான பேரம்பலம் கனகரெத்தினம் அவர்களின் செம்மாதுளம்பூ என்றதொரு இனிமையான தலைப்பையுடைய புத்தகம் 114 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

நீங்களும் எழுதலாம் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் பல அம்சங்களைக்கொண்ட கவிதைகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் இத்தொகுப்பின் இறுதியில் ஷெல்லிதாசன் அவர்கள் எழுதிய மெல்லிசைப்பாடல்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.



இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் பெரும்பாலும் நீங்களும் எழுதலாம், செங்கதிர், சுட்டும் விழி, இனிய நந்தவனம், இசை உலகம் போன்ற சிற்றிதழ்களிலும், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி போன்ற வாரப்பத்திரிகைகளிலும் வெளியானவை.

1970 களிலிருந்து இன்று வரையும் சளைக்காமல் கவிதை எழுதி வரும் ஷெல்லிதாசனின் முதல்புத்தகத்தை நீங்களும் எழுதலாம் வெளியீட்டகம் வெளியிட்டது பாராட்டத்தக்க விடயம்.
முதல் கவிதையான 'விழும் வரை நானோயேன்' என்பதில் உழைப்பைப் பற்றியும், உழைப்பில் சோம்பல்தனம் இருக்கக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

'... வெய்யிலோ மழையோ எனக்கில்லை
வியர்வையிற்குளித்தே தினமெழுவேன்
கையிலே இருக்கும் காலத்தினை - ஏழை
கண்ணீரைத்துடைத்திட கவி புனைவேன்
சோம்பலென்பதை நானறியேன், எந்த
சொந்தத்தை நம்பியும் நான் வாழேன்
வீழும் வரையும் நானோயேன் அதற்கு
வேண்டும் திடங்கொள் மனசிருக்கு!'

இன்று பணத்துக்கு கட்டுப்படாத மனிதனில்லை. பணக்காரருக்கு கொடுக்காத மரியாதையுமில்லை. அவ்வாறு யாராவது ஒருவரின் கீழ் அடிமையாக வாழும் வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது. இதை நிஜங்களின் நிழல்கள் என்ற கவிதையில் முதல் அடியில் நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்கிறார் ஷெல்லிதாசன் அவர்கள்,

'உனது
சுயத்தை நீ இழக்காத வரை
உனது
சுதந்திரம் நிலைத்திருக்கும்'

விஞ்ஞான யுகதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தெரியாமலிருக்க முடியாது. அந்த வகையில் மண்வாசனை என்ற கவிதை, நவீனத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கி நிற்கிறது.

ஆயிரங்காலத்துப்பயிர் என்றும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயயிக்கப்படுகின்றன என்றும் காலங்காலமாக கேட்டு வந்தோம். ஆனால் தற்காலத்தில் திருமணங்கள் வெறுமனே காதல் என்ற போர்வையில் நிகழ்ந்து விடுகின்றன. கீழுள்ள வரிகளில் அதை தெளிவாக புரியலாம்.

'... கைத்தொலைபேசி
கடுகதி அழைப்பில்
அரும்பும் காதல்கள்!
வலையமைப்பின் வலைவீச்சில்
வளைத்துப்பிடித்த திருமணங்கள்...'

'... ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
குறும்பேச்சாகி (SMS)
ஆசை ஆறு நாள்
மோகம் மூன்று நாள் என
சிறகு முறிக்கும்
ஆயிரமாண்டு கால பந்தங்கள்'

திருமணமாகாத பெண்கள் தாலி வரம் கேட்டுத்திரியும் போது திருமணம் முடித்த பெண்கள் கணவனிடம் படும்பாடு தெரியாததொன்றல்ல. சில கணவன்மார் வெளியுலகுக்கு கனவான்களாக இருப்பினும் நான்கு சுவர்களுக்குள் அவர்கள் செய்கின்ற துவம்சம் சொல்லி முடிக்கக்கூடியதல்ல. அத்தகைய ஒரு பெண்ணின் கண்ணீர், கவிதையாக இவ்வாறு விழுகிறது

'மணமாலைக்கும்
மாங்கல்யத்துக்குமாய்
மனமாய்
கழுத்து நீட்டியது
ஒரு மனிதனுக்கல்ல...
கழுதைக்குத்தானென்பதை
காலம் உணர்த்தியது
நாளாந்தம் அது என்னை
காலால் உதைக்கிறது...'

ஆண்மைத்தனம் என்பது பெண்களைப்போலவே கற்போடு வாழ்வதும், கைப்பிடித்த மனைவியிடம் அன்பாக நடப்பதுவும் தான். தவிர பெண்களை அடக்குவதும் ஒடுக்குவதும் ஆண்மைக்கு அழகல்ல என்று உணர்த்துவதற்காக அதே கவிதையில் நக்கலாக கீழுள்ளவாறு குறிப்பிட்டு பெண்ணின் சோகத்தை காட்டி நிற்கிறார்.

'... அடக்கி ஒடுக்குவது
ஆண்களின் ஆளுமையாம்
அடங்கிப்போவது
பெண்மையின் பூர்வீகமாம்
அடித்துச்சொல்கிறான்...
குடித்துக் கும்மாளமடிப்பதும்
கொண்டவளை விட்டு
கண்டவளைத்தழுவி
காலங்கழிப்பதும்
ஆண்மையின்
தத்துவமாம் கேளுங்கள்'

இதே கருத்துடைய இன்னொரு கவிதை 'நானாக நான்'. இதிலும் தான் படும் அவலம் பற்றி பெண்னொருத்தி கூறுவதாக அமையப்பெற்றிருக்கிறது. இந்த கவிதையின் சந்தம் என்னை மிகவும் கவர்ந்தது. பல தடவை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை தந்தது. உதாரணமாக சில வரிகள்...

' பஞ்சவர்ணக் கிளியாகி
பறந்து வர ஆசைப்பட்டேன்
கூண்டுக்குள்ளே எனை அடைத்து
குதூகலிக்க அவனும் வந்தான்
கலாப மயிலாக மாறி
களி நடனம் புரிய வந்தேன்
நீண்ட தோகை அதைப்பறித்து
நிர்வாணமாக்க அவன் வந்தான்'

அரசியல் தலைவர்கள் என்றுமே மக்களுக்காக போராடுவதில்லை என்ற கருத்தில் 'போதுமே உங்கள் ஜாலங்கள்' என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களிடம் 'பண்டிகை தினங்களில் ஊடகங்களில் வாய்கிழிய பொய் பேசுவதை விட்டாலே எங்கள் வாழ்வு செழிக்கும்' என்று நகைச்சுவையாக இயம்பியுள்ளார் நூலாசிரியர் ஷெல்லிதாசன்.

காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக அடிமைச் சமுதாயமாக கணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்காய் பாடப்பட்ட கவிதை 'மலையுச்சியில் மையங்கொள்ளும் சூறாவளி'. தேயிலை சுமையுடன் கூடிய மனச்சுமையையும் தினம்தினம் அனுபவிக்கும் அந்த ஆத்மாக்கள் எத்தனை துன்பங்களை சந்திக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியாது.
ஆனால் ஒரு கவிஞனால் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நபர்களாகவே மாறி சிந்திக்கும் திறன் கவிஞனுக்கு மாத்திரம் தான் உண்டு. பொதுவாக கங்காணி, துரைமார் தன்னலவாதிகளாகவே இருப்பார்கள் என்ற பரவலான கருத்தொற்றுமை எல்லோருக்கும் இருக்கிறது. தொழிலாளிகளின் கஷ்டம் புரியாத அவ்வாறான ஒரு துரை பற்றி இப்படி கூறுகிறார்.

'... அந்த
ஐயா - துரையின்
அழகு மலைத்தோட்டத்தில்
தேயிலை
கொய்யும் ராமசாமியின்
ஐந்து பிள்ளைக்குடும்பத்துக்கு
அன்றாடம் கூலி
ஐந்நூறு ரூபா
அப்பப்பா ரூ மச்சாம்
துரை சொல்லி அழுகிறார்'

இன்று எல்லோரையும் மிக வேகமாக தொற்றிக்கொண்டதொரு நோய் தான் ஈகோ. விட்டுக்கொடுப்பின்மையால் இன்று பல குடும்பங்கள் சீரழிகின்றன. நட்பு வட்டாரங்கள் வலுவற்று போகின்றன. நான், எனது, எனக்கு என்ற தன்னிலைவாதத்தால் சமூகம் புரையோடிப்போயிருக்கிறது. அத்தகையதொரு நிலைப்பாட்டின் எடுத்துக்காட்டாவே 'சுவருடைத்து வெளியே வா' என்ற கவிதை அமைந்திருக்கிறது.

கீழுள்ளவற்றிலிருந்து விடுபட்டு மனிதர்களை நேசிக்கும் ஒருத்தனாக மாறி வருமாறு அழைக்கிறார் கவிஞர் ஷெல்லிதாசன்.

'.. மதிப்பு மரியாதைகள்
பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்டன
கொடுப்பதற்கல்ல என்ற
உனது
கொள்கை பிரகடனங்கள்
இறுக்கமானதும்
ஏளனம் நிறைந்ததுமான
உனது பார்வைகள்
சிரிப்பை உதிர்க்க மறுக்கும்
உன் உதடுகள்
நடையுடையிலொரு
நாட்டாண்மைக்காரத்தனம்'

ஆளுமைக்கொண்ட அன்னைத்தமிழ் என்ற கவிதையில் தமிழின் பெருமை பறைசாற்றப்பட்டிருக்கிறது. தமிழின் சுவையை அறியாதவர்களால் தமிழைக்கற்று அதன்படி கருமமாற்றுவது கஷ்டமாகத்தானிருக்கும். ஆனால் உலகத்திலேயே இனிமையான மொழி தமிழ் தான் என்பதை நாமெல்லோரும் அறிவோம். கவிஞர் ஷெல்லிதாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

'பாலையும் தேனையும் நீ பருக - சில
நாளிலே அவைகூட திகட்டிவிடும்
நாலையும் இரண்டையும் பெற்ற தமிழ் - அதை
நாளும் படித்திட சுவைபெருகும்
காதலைப்படித்திட ஆசை வந்தால் - அக
நானூறு இருக்கவே இருக்குதடா
கச்சிதமாகவே அதைப்படித்து - நல்ல
காதலை செய்ததில் மூழ்கிடலாம்'

'நானும் ஒரு இளங்குயிலும்' என்ற கவிதையை ஆரம்பத்தில் வாசிக்கும் போது தொலைந்து விட்ட காதலியைப் பற்றி பாடுவதாக எழுதியருக்கிறாரோ என்று தான் எண்ணினேன். ஆனால் இறுதியில் வெகு சுவாரஷ்யமாக நாமெல்லோரும் சிறுவயதில் படித்த காக்கையும், குயிலும் சம்பவத்தை கூறியிருப்பதைக்கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அழகான சந்தத்துடனும் ஓசை நயத்துடனும் இது எழுதப்பட்டாலும் இறுதியில் வாசகரைப்பார்த்து கேட்டிருக்கும் இரு கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. அதாவது

'பழைமையில் பல காலம்
பாய்விரித்து படுத்த மனம்
ஒரு நாளில் தன்னுறக்கம்
ஒழித்து கண் விழித்திடுமா?
மூடத்தனங்களிலே
மூழ்கிவிட்ட மனிதனையும்
மாற்றிவிட பலர் வந்தார்
மாறியதா மனிதமனம்?'

இது போன்று பல கவிதைகள் இவ்வாறாக புதுவிதமாகவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கக்கூடிய வகையில் எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மெத்தப்படித்தவன் என்று தன்னைக்காட்டிக்கொள்வதற்காக இன்று எழுதப்படும் பல கவிதைகள் யாருக்குமே புரிவதில்லை. அவ்வாறு எழுதப்படுபவை தான் சிறந்த கவிதைகள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல கால அனுபவமும், திறமையும் ஆளுமையும் கொண்ட ஷெல்லிதாசன் போன்ற சிலரின் கவிதைகள் கருத்து செறிவுள்ளதாகவும், மக்களுக்கு ஏதாவதொரு நல்ல செய்தியை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. அவரது கவிதைகளில் வாசகனை திக்குமுக்காடச்செய்யும் சொற்றொடர்கள் வந்து கஷ்டப்படுத்தவில்லை. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதை முடியும் வரை வாசித்து விட்டுத்தான் எழும்ப வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தியது. அவர் இன்னும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் இலக்கிய முயற்சிகள் இன்னும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - செம்மாதுளம்பூ
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
முகவரி – 11/6, சென்யூட்லேன்,
பாலையூற்று, திருகோணமலை
தொலைபேசி – 026 - 4900648
வெளியீடு – நீங்களும் எழுதலாம்
விலை - 200/=

No comments:

Post a Comment