Monday, September 27, 2010

முரண்பாடுகள் - சிறுகதைத் தொகுப்பு

முரண்பாடுகள் சிறுகதைத் தொகுப்பு பற்றிய இரசனைக் குறிப்பு

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரிவு, மட்டுவில் கிழக்கு மானாவளைக் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர் திரு. இதயராசன் அவர்கள். அவருடைய முரண்பாடுகள் என்ற சிறுகதைத்தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது.

2008ம் ஆண்டு மீறல்கள் என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தன்னை ஓர் கவிஞராக நிலைப்படுத்தியவர், முரண்பாடுகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் நானொரு சிறுகதை எழுத்தாளனுமாவேன் என இலக்கிய உலகத்துக்கு புரிய வைத்திருக்கிறார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி அச்சாகியிருக்கிறது முரண்பாடுகள் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு.



இவரது சிறுகதைகள் தான் சந்தித்தவற்றின் மீட்டலாகவே காணப்படுகிறது. அவர் பிரயோகித்திருக்கும் மொழிநடை வாசகர்களை திக்குமுக்காடச் செய்யவில்லை. அதை பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் தனது உரையில்

இதயராசனின் மொழிநடை பேச்சுமொழியோடியைந்தது. அதிலே ஆர்ப்பாட்டமான தன்மையையோ சொல் அலங்கார அடுக்குகளையோ வாசகரை பிரம்மிக்கச் செய்யும் வர்ணனைகளோ இல்லை. அவர் அருகிலிருந்து பேசுவது போலவே அவருடைய கதைகள் அமைந்துள்ளன... என்று குறிப்பிடுகிறார்.

அது மாத்திரமின்றி சில சொற்கள் இலங்கை நாட்டின் நாலாபுறத்திலும் வசிக்கும் மக்களின் பேச்சுமொழியிலிருந்து சற்று மாறுபட்டு யாழ்ப்பாணத் தமிழின் சுவையை உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.

சிறுகதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை அலட்டிககொள்ளாமல் தான் சார்ந்த சூழலில் இடம்பெற்ற, தன் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன சில கருக்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் இதயராசன் அவர்கள்.

அவரே அதைப் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனது ஆழ்மனதில் உறங்கிக் கிடந்தவற்றுக்கே உயிர்கொடுக்க முற்பட்டேன். அவை எனது சின்ன வயசு அனுபவங்களாகவே இருந்தன. அத்தோடு வன்னிப் பிரதேசத்தினை தளமாகக்கொண்டு எழுபதுகளிலிருந்து அண்மைய நந்திக்கடல் வரையான சம்பவங்களைப் பதிவாக்கியுள்ளேன்.

இத்தொகுப்பிலிருக்கும் பத்துச்சதம் என்ற முதல் சிறுகதையானது சிறுவன் ஒருவனின் பார்வையில் நகர்த்தப்பட்டிருக்கிறது. யாரையும் மதிக்காத, ஒருவருடனும் சிரித்தும் பேசாத குணமுடைய ஒரு சிறுவன், தன் தந்தை மற்றவர்களுடன் நட்புறவாடும் போது எரிச்சலடைகிறான். அப்படியிருக்க ஒரு தினத்தில் அவன் வைத்தியசாலைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.

அத்தருணத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. அதாவது கவுண்டரிலிருந்து துண்டுபெற்ற பின்னரே வைத்தியசாலையினுள்ளே செல்ல முடியும் என்று அவன் அறிகிறான். ஆனால் கையில் காசில்லாத சந்தர்ப்பமது. கடும் காய்ச்சலாயிருக்கும் நேரத்தில் அருகே தன் தந்தையின் சிநேகிதர் அவனை பார்த்து, நிலைமை அறிந்து உதவ முன்வந்த போது சிறுவன் தனக்குள்ளே வெட்கப்பட்டுப்போகிறான். எல்லோருடனும் நட்பாக பழகினால் ஆபத்தில் கைகொடுக்கும் என்ற படிப்பினையை தருகிறது பத்துச்சதம் என்ற இந்த சிறுகதை.

அடுத்ததாக ஜெயா எனும் சிறுகதை இன ஒருமைப்பாட்டை எடுத்தியம்புகிறதாய் பின்னப்பட்டிருக்கிறது. கொழும்பில் கலவரம் நிகழ்கிற அந்த பயங்கரமானதொரு சூழ்நிலையில் சகோதர இனத்தைச்சேர்ந்த ஜெயாவை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் வாசகர்களுக்கும் உண்டாகிறது. இறுதியில் இரவோடிரவாக காட்டுவழியால் உடையார்கட்டி எனும் இடத்துக்கு ஜெயா பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த அந்நியோன்னியத்தை, பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் இத்தகைய மனநிலை எல்லோருக்கும் இருப்பது ஐயமே.

நம்பிக்கை என்ற கதை பானுமதி என்ற பெண்ணின் கதையதாக இருக்கிறது. பாண்டியன்குளம் எனும் ஊரில் மிகக் கோரமாக யுத்த நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இதுவரை சுத்தமான காற்றையே சுவாசித்தவர்கள் இனி மூச்செடுக்கவும் பயந்து போனதொரு இக்கட்டான நிலைமை உருவாகிறது. அப்போது பரியாரி கணபதியாரின் வாரிசான பானுமதி உட்பட பலரும் இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அந்த கஷ்டமான நிலைமையினை

பாலும் தேனும் ஓடிய ஊரில் வாழ்ந்தவர்கள் பாண் துண்டும் இல்லாமல் புழுத்துச் சக்குப்பிடித்த வெள்ளை அரிசியைத் தண்ணீரில் கழுவி வேகவைத்து அதன் கஞ்சியை அமுதமெனப்பருகினர். சிலர் அதுவும் கிடைக்காமல் காட்டில் உள்ள காய்களை பறித்துத் தின்று, சருகு ஊறிய சாயநிறமான தண்ணீரைக் குடித்தனர்.

எனும் வரிகளால் வாசக நெஞ்சங்களில் துன்ப வெள்ளத்தைத் தேக்கிவிடுகிறார்.

அது மாத்திரமல்ல. இந்தக்கதையின் உச்சகட்ட வேதனையாக இந்த வரிகள் அமைந்து கதையின் சிறப்புக்கு மெருகூட்டுகின்றன.

... கண்களைத் திறந்து பார்க்கிறாள். வெள்ளைக் கோட் போட்ட வைத்தியரின் கனிவான பார்வை அவளுக்கு ஒத்தடம் கொடுக்கிறது. கால்களை அசைக்கிறாள். அசைகிறது. அடுத்து கரங்களினை அசைக்கிறாள். முழங்கைக்கு கீழ் அசையவில்லை. அங்கே கரம் இருந்தால் தானே அசைக்க முடியும். நிலைமையினைப் புரிந்து கொண்ட பானுமதியின் கண்களிலிருந்து ஆறென கண்ணீர் பெருக்கெடுக்கின்றது...

பானுமதியின் கண்களில் மாத்திரமின்றி இக்கதை முழுவதையும் வாசிக்கும் நமது கண்களிலும் கண்ணீர் வருமளவுக்கு இக்கதையை உயிரோட்டமுள்ளதாக, அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை தரக்கூடியவாறு எழுதியிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்ததாக செய்வினை என்ற கதை உளவியல் பிரச்சனையோடு சம்பந்தப்படுத்தி சுவாரஷ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனான ஆறுமுகத்தின் மாமா வீட்டில் திடீரென்று நெருப்பு பிடிக்கிறது. அதைப் பார்த்த அனைவரும் பேயறைந்தது மாதிரி இருக்க, அவ்வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன் வந்த கோமளா எனும் பெண் மாத்திரம் சிரித்தபடி இருப்பதுவும் வாசகனை பிரம்மிக்க வைக்கிறது.

இதே கதையில் இன்னொரு உளவியல் ரீதியான பிரச்சனையொன்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதாவது இளம் தம்பதியர் வசிக்கும் வீட்டில் பெண்ணின் தங்கையும் வந்து சேருகிறாள். அன்றிலிருந்து அவ்வப்போது சமைத்த கறியில் கல் இருப்பதாகவும், வீட்டிற்கு மேல் கற்கள் வந்து விழுவதாகவும பல அதிசயங்கள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை கண்டறிந்த போது ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை

திருமண வயதான போதிலும் திருமணமாகாமல் ஆசைகளை அடக்கி வைத்திருந்ததும், அவளுக்கு இரண்டு வயது மூத்த தமக்கை தனது கணவருடனும் பிள்ளையுடனும் சந்தோஷமாக வாழ்வதும் ஏக்கத்தினையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. அதன்பேறாக உளப்பிளவு (Schizophrenia) எனும் மனநோய்க்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்தது என குறிப்பிட்டுக் காட்டுவதுடன் கோமளாவின் காதல் சுக்குநூறாக உடைந்து போன பின்பே அவளுக்குள் இவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட்டது என சின்னத்தம்பியாரின் கூற்றாக உண்மையான காதலின் ஆழத்தை விளங்க வைக்கிறார்.

கனகலிங்கம் என்ற கதை பாடசாலை தளத்தை அடிப்படையாகக்கொண்டது. இதயராசன் அவர்கள் கல்வியமைச்சில் கடமையாற்றுவதனால் இவை போன்ற அனுபவங்களை கதையாக்குவதில் வல்லமை பெற்றிருக்கலாம்.

அதாவது யாருக்கும் பயமில்லாமல் முரட்டுத்தனத்துடன் படிப்பே ஏறாதவனாக இருப்பவன் தான் கனகலிங்கம். தடியன் என்ற அடைமொழியினால் சக ஆசிரியர்களால் அழைக்கப்படும் கனகலிங்கத்தை பேர் சொல்லி அழைத்ததும் மிகவும் பவ்வியமான தோற்றத்துடன் ஆசிரியர் முன் நிற்கின்றான். வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் அவனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது தான் கதையின் கரு. அதை பாடசாலை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்டனை என்பது தவறைத் திருத்திக்கொள்வதற்கே தவிர பழி தீர்த்துக்கொள்வதற்கல்ல என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் செயற்படுவார்களேயானால் எப்பேர்ப்பட்ட மாணவர்களையும் வல்லவர்களாக்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார் இதயராசன் அவர்கள்.

அது போல முரண்பாடுகள் என்ற சிறுகதை போர் கொடுமையையும், தபால் என்ற சிறுகதையில் குறிப்பிடதொரு ஊரில் நடக்கும் தபால் சேவையின் அசமந்தப்போக்கையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றும் வெள்ளைச்சி என்ற கதை விலங்குகளிடத்தில் அன்பு பாராட்டுவோம் என்ற அடிப்படைக் கருத்தைக்கொண்டு அமையப்பெற்றிருக்கிறது.

மைதானம் என்ற சிறுகதையும் விநோதமாக எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது மைதானம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு புதர்களினிடையே தகர்ந்த நிலையில் காணப்படுகிற மலசலகூடம் தடையாய் இருக்கிறது. அதனை தரைமட்டமாக்குவதில் அதிபர் உட்பட மூத்த ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் முறைப்படி அனுமதி பெறாமல் மலசலகூடம் உடைக்கப்படுமாயின் அதிபரே பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதே.

மாணவர்கள் தான் முதலில் மலசலகூடமிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களே அதை உடைத்தால் பிரச்சனைகள் ஏற்படாது என்று அறிந்த இளம் ஆசிரியர் மாணவர்கள் உடைக்கட்டும் என்ற உள்நோக்கத்தை மனதில் இருத்தி,; மாணவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

கண்டு பிடித்தது தான் நீங்கள் செய்த குற்றம். அதற்கு பிராயச்சித்தமும் நீங்களே தேடிக்கொள்ளுங்கள்

அவர் சொன்னதன் நோக்கத்தை புரிந்து கொண்ட மாணவர்கள் அவரின் கூற்றை வேதவாக்காக ஏற்று மாணவர்கள் மலசல கூடத்தை தரைமட்டமாக்கி விட்டு ஏதுமறியாதவர்கள் போல் இருப்பது ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதிபருக்கு தனது போலி அதிர்ச்சியை காட்டிக்கொள்கிறார். இந்தக்கதையின் இறுதிக்கட்டத்தில் மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறுகிறது.

நான் இங்கு குறிப்பிட்டுக் காட்டியவற்றுக்கும் அப்பால் கதைகளில் சுவாரஷ்யத்தன்மை எந்தளவில் காணப்படுகிறது என்று அறிய ஆவலாக இருப்பீர்கள். இதயராசன் அவர்களின்; முரண்பாடுகள் சிறுகதை தொகுதியைப் பெற இன்றே முந்திக்கொள்ளுங்கள்!!!

Monday, September 6, 2010

கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி

கண்ணுக்குள் சுவர்க்கம் -  சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

எங்கோ ஓர் மூலையில்
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
ஒவ்வொரு இரவும்
தூக்கம் காணாமல் போன கண்களுடன்
ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்
முதிர்கன்னிகளுக்கு...

என்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி நசீலா.


புரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஞாபகம் வருதே, பெருநாள் பரிசு, பாவ மன்னிப்பு, முஹர்ரம் தந்த விடுதலை, நடை, தலை நோன்பும் புதிய பயணமும், கண்ணுக்குள் சுவர்க்கம், சுனாமியும் ஒரு சோடி காலுறையும், இரசனைகள் என்ற பத்து தலைப்புக்களில் சிறுகதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.

இவரது படைப்புக்களில் பெண்ணியம் பேசுவதாய் அமைந்திருக்கிறது. அவரது உரையில் கூட பெண் உணர்வுகள் மிதிக்கப்படுபவையாக இல்லாவிட்டாலும், மதிக்கப்படுபவையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே என நூலாசிரியர் காத்தான்குடி நசீலா அவர்கள் ஆவேசப்பட்டு, கீழே

நான் எழுதிய கவிதைகளில் நாடகங்களில் சிறுகதைகளில் பெண்மையின் துடிப்புகள் தான் அதிகம் கேட்கும்

இங்கேயுள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெறும் எழுத்துக்களாக அல்ல. உணர்வுகளாகத்தான் வடித்திருக்கிறேன்

என்று பெண்மையின் பெருமையை உணர்த்தியிருக்கிறார் திருமதி நசீலா அவர்கள்.
நெஞ்சம் மறப்பதில்லை என்ற முதல் சிறுகதையானது காதலை அடிப்படையாகக்கொண்டு அமைந்த சிறந்ததொரு படைப்பாகும். நஸ்லியா - சாபிர் என்ற இருவரையும், நஸ்லியாவின் தந்தையான கலந்தர் காக்காவையும் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

தனது தங்கையின் பிள்ளைகளில் ஒருவனான சாபிரை தன் மகனாய் எண்ணி படிப்பித்து ஆளாக்குகிறார் கலந்தர் காக்கா. தன் மகள் நஸ்லியாவும் சாபிரும் விரும்புவதை அறிந்தும் அறியாமல் இருக்கிறார். சாபிர் மீது அவர் கொண்ட நம்பிக்கை தான் இவற்றுக்கு காரணம் என வாசகர்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

நஸ்லியாவுக்கு முழு உலகமுமே சாபிர் மச்சான் தான். சாபிருக்கு பல்கலைக்கழகம் கைகூடாத ஒரே காரணத்துக்காக, தனக்கு கிடைத்த அனுமதியையும் மறுத்து விடுகிறாள் நஸ்லியா. நஸ்லியா சிறுவயது முதலே சாபிர் மீது கொண்டிருந்த அன்பினை சாபிர் மச்சான் நண்டு பிடித்துத்தா... சாபிர் மச்சான் சிப்பி பொறுக்கித்தா... என்ற வரிகள் முலம் துல்லியமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஆனால் சாபிர் வெளிநாடு சென்று வரும்போது தன்னுடன் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். சகலதையும் தலையாட்டி கேட்டு விட்டு அவர்கள் சென்றதும் துண்டால் வாயைப்பொத்தி கலந்தர் காக்கா அழும் அழுகை கண்முன் நிழலாடுகிறது.

அடுத்ததாக ஞாபகம் வருதே என்ற சிறுகதையும் தொலைந்து போன காதலை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கிறது. சூழ்நிலைக் கைதியாகி, வாப்பாவின் மையத்தின் பின் தனது மாமாவின் கண்ணீருக்கு கட்டுப்பட்டு, பூ போல பாதுகாத்து வந்த அவளின் இதயத்தை அவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொள்வதன் மூலம் சுக்குநூறாக்கி விடுகிறான் கதையின் நாயகன்.

அவற்றையெல்லாம் மறந்து அவன் இல்லற வாழ்வில் நுழைந்து இன்று மூன்றாவது பிள்ளைக்கும் தந்தையாகி விட்ட போது தான் மெஹரூன் நிசாவின மடல் வாழ்த்துச் செய்தியாக வந்து மனசை சுட்டெரிக்கிறது.

வேலை வேலை என்று ஓடியோடி நிம்மதி தொலைத்த நினைவுகளில் அடிக்கடி வந்து போகும் மெஹரூன் நிசாவை மறக்க மனசு துடித்தாலும் எப்படியாவது ஞாபகம் வந்து விடுவது போல ஓர் சம்பவம் இடம் பெறுகிறது. அதாவது ஒரு கல்லூரியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது சிறப்பு அதிதியாக கலந்துகொள்கிறான் கதையின் நாயகன். அந்தப் பட்டியலில் செல்வி என்ற அடைமொழியுடன் மெஹரூன் நிசாவின் பெயர் அழைக்கப்பட்ட போது அதிர்ந்து விடுகிறான்.

தன்னால் ஓர் பெண்ணின் இளமைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிந்தும் அதிர்ச்சியடையாமல் இருந்தால் அவனுடைய காதலுக்கே அர்த்தமற்று போயிருக்குமே? எனினும் எப்படியாவது மெஹரூன் நிசாவுடன் பேசி அவளுக்கு திருமணம் செய்து கொள்ளச் சொல்லுகிறான். ஷமாட்டேன்| என்ற அவளது உறுதியான முடிவு அவனை ஊமையாக்குகிறது.

உதவிகள் நன்றிக்குரியது. உறவுகள் மரியாதைக்குரியது. முடிந்தால் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நல்ல நண்பராக இருங்கள் என்ற மெஹரூன் நிசாவின் வார்த்தையாடலோடு மிகவும் சோகமாக நிறைவுறுகிறது இந்த கதை.

பாவமன்னிப்பு என்ற சிறுகதை இரண்டு தனவந்தர்களை அடிப்படையாகக்கொண்டது. தனது நெருங்கிய தோழரான அசன் ஹாஜியார் பாத்திமா டீச்சர் எனும் பெண்ணை மணமுடிப்பதாகக்கூறி ஏமாற்றியதையும், தானும் பணம் இருக்கும் காரணத்தால் சபலம், சலனம் இரண்டுக்கும் அகப்பட்டுக் கொண்டதையும் எண்ணி வெந்து துடிக்கிறார் ஹமீது நானா.

ஏழை ஒருத்தன் திருந்தினால் ஒரு குடும்பம் மட்டும் நேர்வழி பெறும். ஆனால் ஒரு பணக்காரன் திருந்தினால் அவன் வாழும் சமுதாயமே பலனடையும் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.
ஆதலால் யாருமற்ற தனித்த ஓர் இரவில் பள்ளிவாயலில் தங்கி, தனக்குத்தானே சாட்டையால் அடித்து படைத்தவனிடம் பாவமன்னிப்பு கோரும் அருமையான கதை. இந்தத் தடவை ஹஜ் செய்து விட்டு வரும்போது, அன்று பிறந்த பாலகனாய் உளத் தூய்மையுடன் ஹமீது நானா காணப்படுவார் என்று வாசக உள்ளங்களை தொட்டு விடுகிறார் கதாசிரியர்.

தலை நோன்பும் புதிய பயணமும் என்ற கதையின் கரு வித்தியாசமானது. தனது தந்தையின் சகோதரியான தன் மாமி வீட்டில் ராணியாகவே வாழ்ந்தவள் மிஸ்ரியா. அவள் சாதிக் என்ற இளைஞனை காதலிக்கிறாள். ஆனபோதும் சாதிக்; தன் காதலில் உறுதியாக இருக்கவில்லை. நௌசாத்தும் நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் மாமியின் வார்த்தைகளுக்கு வீட்டில் யாருமே மறுத்துப் பேசாத காரணத்தால் ஏமாந்து போன இதயத்துடன் மிஸ்ரியாவும், ஏற்றுக்கொள்ள முடியாத இதயத்துடன் நௌசாத்தும் மணவாழ்வில் நுழையும் துரதிஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.

வருடங்களின் நகர்வில் நௌசாத் தான் நேசித்த பெண்ணான நூர்ஜஹானை மணமுடித்ததுவும், மிஸ்ரியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதுமான கோர நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது. அது மாத்திரமன்றி முதன்முதலாக தாய்க்கு எதிராகவும் தன் புது மனைவிக்கு ஆதரவாகவும் பேசுகிறான் நௌசாத்.

இனி தமக்கிடையில் உறவுகள் ஏதுமில்லை என்ற மாமியின் கோபாவேசத்தால் மீண்டும் நௌசாத் வீட்டுப்பக்கமே வராதளவுக்கு நிலமை தலைகீழாகிப்போகிறது. காலம் தன் பாட்டில் கரைய, ஒரு நாள் தன் தோழியின் டிஸ்பன்சரிக்கு செல்லும் மிஸ்ரியா, அங்கு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நூர்ஜஹானையும், அவளுக்கு அன்புடன் பணிவிடை செய்கிற நௌசாத்தையும் கண்டு பேரதிர்ச்சியும் கவலையும் அடைகிறாள்.

மாமிக்கு மகளாய் இருந்தும், சுயதொழிலும், முன்னேற்றத்திற்குமான பெண்கள் அமைப்பை ஆரம்பித்தும் இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமளவுக்கு மிஸ்ரியா முன்னேறியிருக்கிறாள் என்ற சிறிய ஆறுதலோடு முடிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கதை.

இறுதியாக புத்தகத்தின் தலைப்பான கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதை பெண் கல்வியைப்பற்றி pபேசுகிறது. உம்மா உட்பட அனைவரும் ஷிப்னாவுக்கு திருமணம் செய்ய வலியுறுத்தும் போது, அவளது கல்வியை நீடிக்க நினைக்கிறார் ஷிப்னாவின் தந்தையான ஆசிர் ஹாஜி. அவ்வாறு சம்மதித்த தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்ற உண்மையை சுதாகரிக்க முடியாமல் தவிக்கிறாள் ஷிப்னா.

ஷிப்னா முணமுடிக்கவிருந்த சாதிக் என்பவனிடம் தந்தையின் இரண்டாம் தாரமான தனது சாச்சி, என் மகள் ஷிப்னா மேற்கொண்டு படிக்கிறதுக்கு நீங்கள் தான் வழிகாட்டணும் என்று கூறி அழுததாக சாதிக் ஷிப்னாவிடம் நடந்ததை விபரிக்கிறான்.

சாச்சியின் அன்பை எண்ணி தனக்குள் சாச்சியை உம்மா என்று அவள் உச்சரிப்பதை வாசிக்கையில் புல்லரித்துப்போகிறது.

திருமதி நசீலா அவர்களின் சிறுகதைகள் சமுதாயத்திற்கு, பெண்களின் முன்னேற்றங்களுக்கு முன்னுதாரணமானவை. அவற்றில் அறிவுசார் கருத்துக்கள் பல பொதிந்திருக்கின்றன. அநேகமாக எல்லா கதைகளும் உயிர்துடிப்பானவை.

அவர் கையாண்டிருக்கும் மொழிநடை இனிமையாகவும் இதமாகவும் இருப்பதுடன் அம்மொழியினூடே கிழக்கு மாகாணத்துக்குரிய சொல்லாடல்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது. கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற அவரது நூலை வாசித்து நெஞ்சில் சங்தோஷம் ஏற்றிட நீங்களும் தயாரா?

பெயர் - கண்ணுக்குள் சுவர்க்கம்
நூலாசிரியர் - காத்தான்குடி நசீலா
வெளியீடு – புரவலர் புத்தகப்பூங்கா
முகவரி – 25, அவ்வல் சாவியா வீதி, கொழும்பு - 14
தொலைபேசி – 0774 161616, 0786 367431
விலை - 150/=